'ஜானிவாக்கர்' நிறுவனத்துக்கு சலுகை கார்த்தி மீது சி.பி.ஐ., புதிய வழக்கு

புதுடில்லி : 'ஜானிவாக்கர்' விஸ்கியை இந்தியாவில் விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகக் கூறி, லஞ்சம் வாங்கியதாக, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி மீது சி.பி.ஐ., புதிய வழக்கு தொடர்ந்து உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரத்தின் மகனான கார்த்தி, தற்போது லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். தன் தந்தையின் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கார்த்தி மீது, சி.பி.ஐ., புதிய வழக்கு பதிவு செய்து உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில், 'டூட்டி பிரீ' எனப்படும் வரியில்லாத வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்கு, இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகமே அனுமதி அளிக்கும்.
கடந்த 2005ல், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'டியாஜியோ ஸ்காட்லாந்து' நிறுவனத்தின் தயாரிப்பான, ஜானிவாக்கர் விஸ்கி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில், 70 சதவீதம் இந்த விஸ்கியே இடம்பெற்றிருந்தது.
இந்த தடையை நீக்குவது தொடர்பாக கார்த்தியின் உதவியை, அந்த நிறுவனம் நாடியுள்ளது. இதற்காக, அவர் நடத்தி வரும் 'அட்வான்டேஜ் ஸ்டார்டஜிக் கன்சல்டிங்' என்ற நிறுவனத்துக்கு, பிரிட்டன் நிறுவனம், 13 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளது.ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் அந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில், கார்த்தி மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரான பாஸ்கர்ராமன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
