சென்னை வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி வேண்டும் - காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதில் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மழை நீர் வெள்ளம் சூழ்ந்த பகுதியாக காணப்படுகிறது.
வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்ததாவது,
"தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள நிதிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நான் வெற்றி பெற்றால் வேடசந்தூரில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது அலுவலகம் அலுவலகத்தை திறந்துள்ளேன்" என்று ஜோதிமணி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.