
கேரளாவின் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றச்சாட்டு
கேரள சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடிஸ் (ஆர்ஜிஐடிஎஸ்) சார்பில், பிரதீக் ஷா 2030 மாநாடு நேற்று நடைபெற்றது. கேரளாவின் வளர்ச்சிக்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டம்குறித்து இந்த மாநாட்டில் ஆலோ சிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் பேசியதாவது:
சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை எப்படி பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும்என்பதற்கு, நாட்டின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே கேரளா முன்னுதாரணமாக விளங்குகிறது. ஆனால், சமீபகாலமாக இதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே, எதிர்கால வளர்ச்சி திட்டங்களை வகுக்கும்போது கேரளாவின் தனித்துவமான சகோதரத்துவத்தை பலப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டியது அவசியம்.
கேரளாவில் கரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக முன் எப்போதும் இல்லாத சவாலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள தொலைநோக்கு திட்டம், மாநில மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா தலைமையிலான குழுவினருக்கு பாராட்டுகள். இவ்வாறு சோனியா பேசினார்.