குலசேகரப்பட்டினத்தில் ரூ.90 கோடி மதிப்பில் ராக்கெட் ஏவுதள பணிகள் பூமி பூஜையுடன் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன.
இஸ்ரோவின் முக்கியமான SLC திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்றது.
அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக குலசேகரப்பட்டினம் வந்து அடிக்கல் நாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக இன்று பூமி பூஜை நடைபெற்று, அங்கீகரிக்கப்பட்ட பணிகள் துவங்கின.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தொடங்கி வைத்தார்.
அவருடன் விண்வெளி துறை செயலர் மற்றும் DOS அதிகாரிகளும் பங்கேற்றனர்.
SDSC SHAR இயக்குநர் பத்மகுமார் உடன் இருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏவுதளம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 90 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தின் வளர்ச்சிக்கு புதிய ஒளி பாய்ச்சும் என கூறப்படுகிறது.
இங்கே இருந்து வருடத்திற்கு 25-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதே இஸ்ரோவின் குறிக்கோள்.
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட உள்ள ராக்கெட் சுமார் 500 கிலோ எடையுடையது என தகவல்.
சிறிய செயற்கைக்கோள்களை துல்லியமாக விண்வெளிக்குக் கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இது இருக்கும்.
இந்த திட்டம் இந்தியாவின் விண்வெளி ஆய்வில் புதிய சாதனைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சுற்றுலா மற்றும் தொழில் வாய்ப்புகளும் மேம்படும் என நம்பப்படுகிறது.
பெருந்திட்டமான ஏவுதளத்திற்கு தேவையான உள்கட்டமைப்புகள் விரைவில் உருவாக்கப்படவுள்ளன.
இந்தியாவின் விண்வெளி துறைக்கு தென்னகத்தில் கிடைத்துள்ள இரண்டாவது பெரிய ஏவுதளம் இதுவாகும்.
இதுவரை ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமே ஏவுதளம் இயங்கி வந்தது.
இப்போது குலசேகரப்பட்டினமும் அந்தப் பட்டியலில் இடம் பெறுகிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பங்கேற்றார்.
மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் கலந்து கொண்டார்.
திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உடனிருந்தார்.
பெரிய அளவிலான அரசு அதிகாரிகள், இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குலசேகரப்பட்டினம் விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதத் தொடங்கிவிட்டது.