dark_mode
Image
  • Friday, 29 November 2024

கல்விக்கடன் தள்ளுபடி எங்கே? தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்.. லிஸ்ட் போட்டு விமர்சித்த டிடிவி தினகரன்!

கல்விக்கடன் தள்ளுபடி எங்கே? தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்.. லிஸ்ட் போட்டு விமர்சித்த டிடிவி தினகரன்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து பட்ஜெட் மூலமாக மீண்டும் ஒரு நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டார். கோவையில் ரூ.1,100 கோடி செலவில் புதிய ஐடி பூங்கா அமைக்கப்படும், கோவையில் பிரம்மாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும், அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024- 25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய பொதுமக்கள் தொடங்கி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அரசு ஊழியர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமளிக்கும் தேர்தல் கால திமுக அரசின் விளம்பர பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. 'மாபெரும் தமிழ்க்கனவு' எனும் தலைப்பில் தாக்கலாகியிருக்கும் நிதிநிலை அறிக்கையில் சமூகநீதியை முதல் இலக்காக நிர்ணயித்திருக்கும் திமுக அரசு, அந்த சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குகிறது.

மாநிலங்களே தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கு பீகார் தொடங்கி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்காண்ட் என பல மாநிலங்கள் முன்னுதாரணமாக இருக்க தமிழகம் மட்டும் மத்திய அரசையே இன்னமும் எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? சிங்காரச் சென்னை திட்டத்திற்கு ரூ.500 கோடியும், வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இவ்விரு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1500 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதனால் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்த எவ்வித விவரங்களையும் வெளியிடவில்லை.

2024- 25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2500 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக்கடன் வழங்கப்படும் என அறிவித்திருக்கும் திமுக அரசு, தன்னுடைய தேர்தல் வாக்குறுதியான 159ன் படி கல்விக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடாதது எதிர்பார்த்து காத்திருந்த தமிழக இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுபேற்ற திமுக அரசு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் 3 லட்சத்து 50 அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற திமுகவின் 187 வது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற முடியாத பகல் கனவாக மாறியிருக்கிறது.

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பே தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில் நடப்பாண்டில் 3500 புதிய பேருந்துகள் வாங்கப்படும் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்ற கடந்த பட்ஜெட் அறிவிப்பு, வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ள நிலையில் நடப்பாண்டில் மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு மையங்கள், ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி என புதுப்புது கவர்ச்சிகரமான அறிவிப்புகளின் மூலம் திமுக தனது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார களமாக தமிழக சட்டமன்றத்தை பயன்படுத்துகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கோவிட் தொற்றுக்கு பிறகு படிப்படியாக மீண்டு வந்த சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி அதள பாதாளத்திற்கு தள்ளிய திமுக அரசு, அவர்களை சரிவில் இருந்து மீட்பதற்கான எந்தவித புதிய திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என்பது சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாகவோ, குறைப்பது தொடர்பாகவோ எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது தமிழக மக்கள் மீதான அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் கடிதம் எழுதுவதோடும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதோடும் கடமை முடிவடைந்து விட்டதாக நினைக்கும் தி.மு.க அரசு மீனவர்கள் கைதை தடுத்து நிறுத்துவது தொடர்பாகவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவது தொடர்பாகவும் எந்தவிதமான அறிவிப்புகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்யவில்லை. ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகங்கள், மாணவ, மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் விலையில்லா மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட நாடுபோற்றும் நல்ல திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இடம்பெறாதது கடும் கண்டனத்திற்குரியது.

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த அரசு மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 500 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பொதுமக்கள், விளைநிலங்கள் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள், இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தும் மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்புக்காக தவித்து கொண்டிருக்கும் தமிழக இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக தந்திருக்கிறது திமுக அரசு.

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவைகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து பட்ஜெட் மூலமாக மீண்டும் ஒரு நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியிருக்கிறது. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து மக்களை ஏமாற்ற பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் திமுகவினருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

கல்விக்கடன் தள்ளுபடி எங்கே? தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்.. லிஸ்ட் போட்டு விமர்சித்த டிடிவி தினகரன்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description