கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய உத்தரவு.. உபி முதல்வர் யோகி அதிரடி..!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் யோகியின் உத்தரவின்படி, ஒவ்வொரு கோட்டத்திலும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் குழுக்கள் மாவட்ட அளவில் செயல்படும். அதில், ஒரு மூத்த நிர்வாக அதிகாரி, காவல்துறை அதிகாரி மற்றும் கல்வித் துறைப் பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுவார்கள். கல்லூரி அங்கீகாரத்தின் நம்பகத்தன்மை மற்றும் சேர்க்கை நடைமுறைகளை சரிபார்க்க இந்த குழுக்கள் கள ஆய்வுகளை மேற்கொள்ளும்.
விசாரணையின்போது, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளின் முழுமையான பட்டியலையும், அவற்றின் அங்கீகார சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு மாணவரையும் அங்கீகாரம் இல்லாத படிப்புகளில் சேர்க்கக் கூடாது என யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை உடனடியாக தொடங்கி, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.