dark_mode
Image
  • Monday, 06 October 2025

கரூர் சம்பவத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் கண்துடைப்பே, சிபிஐ தான் வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

கரூர் சம்பவத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் கண்துடைப்பே, சிபிஐ தான் வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கரூர் சம்பவத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்பது கண்துடைப்பே, மக்களுக்கு உண்மை நிலை தெரிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

 

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது:

தமிழகத்திற்கு வாய்த்திருக்கும் முதல்வர், எப்படிப்பட்ட பொம்மை முதல்வர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி.

நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.

அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே. என்ன அவதூறு பரவியது?

உங்கள் கட்சிக் காரர்கள், 'தமிழ்நாடு மாணவர் சங்கம்' என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே அந்த அவதூறா?

உங்கள் அரசின் காவல்துறை பிரசாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுகவின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது, இவை எல்லாம் வதந்தியா?

பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன? உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே, அதுவா?

அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே, அதுவா?

கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?

சென்னை ஏர் ஷோவை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே, அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே?

எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!

இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.

மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதல்வர் அவர்களே... க்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்.

இவ்வாறு அதில் இபிஎஸ் கூறி உள்ளார்.

related_post