dark_mode
Image
  • Sunday, 07 December 2025

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. முதன்முறையாக மனம் திறந்த அஜித் குமார்.. சொன்னது என்ன?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. முதன்முறையாக மனம் திறந்த அஜித் குமார்.. சொன்னது என்ன?

நடிகர் அஜித் குமார் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் பல விஷயங்களை பேசியுள்ளார். அவருடைய இந்தன் நேர்காணல் தற்போது இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தனது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார் ஏகே.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த துயர சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் பகிர்ந்துள்ள கருத்து சோஷியல் மீடியாவில் பலர் மத்தியிலும் கவனம் ஈர்த்து வருகிறது.

தனியார் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ஏகே பல விஷயங்களை பேசியிருக்கிறார். அந்த வகையில் கரூர் சம்பவம் குறித்து பேசும்போது, அந்த தனி நபரை மட்டுமே கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காரணமாக கூற முடியாது. நான் அனைவருமே அதற்கு காரணம் தான். நமக்கான கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கூட்டத்தை திரட்டுவதில் வெறி கொண்ட ஒரு சமூகமாக நான் மாறி இருக்கிறோம். இது முடிவுக்கு வர வேண்டும்.

கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்கும் கூட்டம் கூடுகிறது. ஆனால் அங்கே இதெல்லாம் நடப்பது கிடையாது. தியேட்டரில் மட்டும் இந்த துயரம் ஏன் நடக்கிறது? சினிமா பிரபலங்களுக்கு மட்டும் ஏன் இது நடக்கிறது? இது முழு சினிமா துறையையும் தவறான முறையில் காட்டுகிறது. நாங்கள் ரசிகர்களுடைய அன்புக்காகவே உழைக்கிறோம்.

ஆனால் உயிரை பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்டுவதற்கு வேறு பல வழிகள் உள்ளது. FDFS கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகத்துக்கும் இதில் பங்கு இருக்கிறது. இவ்வாறு கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது

தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார் அஜித். அதே போல் தற்போது தங்களுடைய உயிரை பணயம் வைத்து நடிகர்களுக்கு அன்பு காட்ட வேண்டாம் என்ற கருத்தை பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதோடு கரூர் சம்பவம் குறித்து தன்னுடைய கண்ணோட்டத்தை மிக முதிர்ச்சியாக அவர் பகிர்ந்து இருப்பது பலர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று குவித்து கொண்டிருக்கிறது.

இதனிடையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரை கூட்டம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்திற்கு அழைத்து நடிகர் விஜய் ஆறுதல் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

நடிகர் அஜித் குமார் அளித்துள்ள பேட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அவர் அடுத்தாக நடிக்கவுள்ள படம் பற்றிய அப்டேட்டையும் வழங்கியுள்ளார். ஜனவரி மாதம் ஏகே 64 படத்துக்கான ஷுட்டிங் துவங்கும் மற்றும் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவுள்ளார்.

கடந்த மே மாதம் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த 'குட் பேட் அக்லி' வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் காம்போ இணையவுள்ளனர். இதனால் ரசிகர்கள் இடையில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 
 

related_post