dark_mode
Image
  • Friday, 18 July 2025

ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை

ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை: 'உறுப்பினர் சேர்க்கையின்போது, ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கட்சியினர் கலந்துரையாட வேண்டும்' என, தி.மு.க., மாவட்டச் செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

 

'ஓரணியில் தமிழகம்' உறுப்பினர் சேர்க்கை குறித்து, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.

அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாவது:

தமிழக மக்களை ஓரணியில் கொண்டு வர, வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும்; பொது மக்களையும், இளைய தலைமுறையினரையும் தி.மு.க.,வில் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

தி.மு.க., நிர்வாகிகள், மக்களை தேடி வீடு வீடாக செல்லும்போது, அவர்களுக்கு கிடைக்கிற வரவேற்பு கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். செல்லும் இடமெல்லாமல் மக்களின் உற்சாக வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும்போது, இன்னும் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்.

உறுப்பினர் சேர்க்கை நடத்தி முடிப்பதற்கு, இன்னும் 30 நாட்களே இருக்கின்றன. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்துடன், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது ஒதுக்கி, கட்சியினர் கலந்துரையாட வேண்டும்.

பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்திற்கு இழைத்து உள்ள, இழைக்கவுள்ள அநீதியை, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வது தான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.

அடுத்த 30 நாட்களில், தமிழகத்தில் மொத்தமுள்ள 68,000 ஓட்டுச்சாவடிகளிலும் சேர்த்து, இரண்டரை கோடி பேரை தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

நாம் உருவாக்கியுள்ள, 'பூத் டிஜிட்டல் ஏஜென்ட்'கள், கட்சிக்கு மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கும், தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்த வேண்டும்.

இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. எந்தெந்த ஓட்டுச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறை சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என தெரிந்தால், அங்கு மீண்டும் முதலில் இருந்து துவங்குவோம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

related_post