ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான நேரடி போர் காரணமாக, உலகின் பரபரப்பான வான்வழி முனையமான துபாய் சர்வதேச விமான நிலையம் முடக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 2.6 லட்சம் பயணிகள் பயணிக்கும் இந்த விமான நிலையம் மூடப்பட்டதால், சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
துபாய் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விமானத்துறை முடங்கியதால், ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் ரூ. 8.3 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எமிரேட்ஸ் விமான நிறுவனம் நாளொன்றுக்கு ஈட்டும் 100 மில்லியன் டாலர் வருவாய் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது. துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27% பங்களிக்கும் இந்த துறை முடங்கியதால், சுற்றுலா, ஹோட்டல் மற்றும் வர்த்தக துறைகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
வான்வழிப் பாதையில் ஏவுகணைகள் பாய்வதால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன. இது வெறும் போக்குவரத்து பாதிப்பு மட்டுமல்ல, உலகளாவிய பொருளாதார அதிர்வாகவும் பார்க்கப்படுகிறது.