எஸ்.ஐ.ஆர் மூலம் தவெக வாக்குகளை தடுக்க திட்டம்… அருண்ராஜ் பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இதைக் கண்டித்து தவெக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தவெகவின் வாக்குகளை தடுக்க திட்டமிட்டிருப்பதாக அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் தவெக சார்பில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் அவசியமா? என்று கேட்டால் நிச்சயம் அவசியம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஏன் அவசர அவசரமாக தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொள்கிறது? அதுவும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏன் செய்ய வேண்டும்? இதுதான் எங்களின் கேள்வியாக இருக்கிறது.
தவெக நிர்வாகி அருண்ராஜ் பேட்டி
தமிழகத்தில் 6.40 கோடி வாக்காளர்களும், 68 ஆயிரம் பி.எல்.ஓக்களும் உள்ளனர். இவர்கள் ஒரு மாதத்திற்குள் எப்படி மூன்று முறை விசிட் செய்வார்கள். இந்த குறுகிய காலகட்டத்தில் எப்படி பூர்த்தி செய்து, சரிபார்த்து, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்வார்கள். அவர்கள் அரசு வேலையில் இருக்கிறார்கள். எனவே அந்த வேலையையும், இந்த வேலையையும் எப்படி பார்க்க முடியும். அதுமட்டுமின்றி பி.எல்.ஓக்களும் சரியான விளக்கம் கொடுக்க முடியாத சூழலில் இருக்கின்றனர்.
எஸ்.ஐ.ஆர் கண்டனப் போராட்டம்
மேலும் தவெகவினர் அதிகமிருக்கும் பல இடங்களில் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் அளிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பாக கோவை மாவட்டத்தை பலர் புகார்கள் தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்கிறோம். எங்களுக்கு நியாயமான சில சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. உதாரணமாக பீகார் மாநிலத்தில் இப்படித் தான் அவசர கதியில் எஸ்.ஐ.ஆர் பணிகளை செய்தார்கள்.