dark_mode
Image
  • Thursday, 05 February 2026

என் கனவு - என் எதிர்காலம்' திட்டம் தொடக்க விழா.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்!

என் கனவு - என் எதிர்காலம்' திட்டம் தொடக்க விழா.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இன்று (பிப்ரவரி 4 ஆம் தேதி) நடைபெறும் அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘என் கனவு - என் எதிர்காலம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். ‘ உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ மூலம் பெறப்பட்ட 1.80 லட்சம் மனுக்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழாவும் நடைபெற இருக்கிறது.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

மேலும் இணையதளத் தொடக்க விழாவும், விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் ஒரே நேரத்தில் இன்று நடைபெற இருக்கிறது. திண்டிவனம் - செஞ்சி சாலையில் உள்ள கொள்ளார் கிராமத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.

என் கனவு - என் எதிர்காலம் திட்டம்

இதில் பங்கேற்கும் முதலமைச்சர், நலத்திட்டப் பயன்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்களையும் வழங்குவார். மேலும், இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்ட ‘என் கனவு - என் எதிர்காலம்’ என்ற இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்து உரையாற்றுவார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நல உதவிகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதலமைச்சர் நல உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சருக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

1.80 லட்சம் பயனாளிகள்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட முதியோர் உதவித் தொகைக்கான தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் வேளாண்துறை, வருவாய்த் துறை, உள்பட பல்வேறு அரசு துறைகளின் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. அதே போல இந்த விழாவில் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கப்படுகிறது

காந்தியார் திடல் வரை ஊர்வலம்

வரவேற்புக்குப் பிறகு, திண்டிவனம் தீர்த்தகுளத்திலிருந்து செஞ்சி சாலை காந்தியார் திடல் வரை சாலை வழியாக ஊர்வலமாக வந்து விழா நடைபெறும் இடத்தை முதலமைச்சர் சென்றடைவார். விழா முடிந்ததும், சாலை மார்க்கமாகவே சென்னைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் போலீசார்

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, விழா நடைபெறும் இடம், திண்டிவனம் பகுதிகள் மற்றும் அவர் செல்லும் வழித்தடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

விழா நடைபெறும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு

பயனாளிகள் அதிகம் கூடுவார்கள் என்பதனால், சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 4 நாட்களாக விழா மேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. இந்த பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

2025 ஜூலையில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவுக்காக போக்குவரத்து சாலைகளும் இருபுறமும் சீரமைக்கப்பட்டு உள்ளன.

related_post