எதையும் மறைக்கக்கூடாது, தினம்தோறும் ஆய்வு : போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு!

தமிழகத்தில் காவல் நிலையங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜூவால் உத்தரவிட்டுள்ளார். daily inspections should be carried out
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார், போலீசார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.
அஜித்குமாரை தாக்கிய மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குற்றப்பிரிவு தனிப்படையை இயக்கியது யார்? அஜித்குமாரை இப்படி தாக்குவதற்கு சிறப்புப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? யார் அதிகாரம் கொடுத்தது? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று காட்டமாக கேள்வி எழுப்பியது.
இந்தசூழலில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், எஸ்.பி. அந்தஸ்துக்கும் மேல் உள்ள அதிகாரிகளுடன் ஜூம் மீட்டிங் மூலம் இன்று (ஜூலை 2) ஆலோசனை நடத்தினார். அப்போது, “தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி., டிஎஸ்பி, காவல்நிலைய இன்ஸ்பெக்டர் என காவல்துறையில் அதிகாரிகளுக்கு கீழ் இயங்கும் தனிப்படைகளைக் உடனடியாக கலைக்க வேண்டும்.
குற்றசம்பவங்கள் நடைபெறும் போது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும்
எந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்தாலும் 35b நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளை தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் செயல்படக்கூடாது. உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலை தொடர்ந்து முக்கியமான வழக்குகளுக்கு மட்டுமே சிறப்புப் பிரிவு அமைக்க வேண்டும். அந்த வழக்கு முடிந்ததும் தனிப்படையை கலைத்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் என்ன பேசினார் என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “‘முதல்வர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவு குறித்துதான் இந்த மீட்டிங்கில் டிஜிபி பேசினார். வழக்குகளில் எல்லோரையும் விசாரணைக்கு அழைத்து வரக் கூடாது. மிக மிக முக்கிய வழக்கு குற்றவாளியாக இருந்தால் மட்டும் விசாரணைக்கு அழைத்து வர வேண்டும். தொடர்ந்து எந்த வழக்கு, யாரை அழைத்து வந்து விசாரணை செய்கிறீர்கள்? என்ற விவரங்களை மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்த பிறகே விசாரிக்க வேண்டும். அடித்து துன்புறுத்தி விசாரிக்கக் கூடாது. குடிபோதையில் உள்ளவர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
இரவு நேரங்களில் பெண்களை விசாரணை என்று காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
போலீஸ் அதிகாரிகள் அன்றாடம் ரோந்து பணிகளுக்கு செல்ல வேண்டும். உதவி ஆணையர்கள், டிஎஸ்பி அந்தஸ்துள்ள அதிகாரிகள் அன்றாடம் காவல்நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு கஸ்டடி மரணம் நடக்கக் கூடாது’ என்று அறிவுறுத்தினார்.
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் பேசும்போது, ‘தனிப்பிரிவு ஏட்டுகள், மாநகரங்களில் ஐஎஸ்(IS) தனிப்பிரிவு ஏட்டுகள் அந்தந்த காவல்நிலையங்களில் நடக்கக்கூடிய அன்றாட சம்பவங்களை மறைக்காமல் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இப்படி மறைப்பதனால்தான் இதுபோன்று தவறுகள் நடக்கிறது. எஸ்பி இன்ஸ்பெக்டர்(தனிப்பிரிவு), ஐஎஸ் ஏசி, டிசி ஆகியோர் மேல் அதிகாரிகளுக்கு எதையும் மறைக்காமல் தெரியப்படுத்த வேண்டும். மறைப்பதாக தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய விசாரணைக்கு அழைத்து வருபவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். காவல்நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடமும், பார்வையாளர்களிடமும் அன்பாக பேசுங்கள். கனிவாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கோபமாக பேசக்கூடிய அதிகாரிகளும், எடுத்தவுடனேயே கைநீட்டும் அதிகாரிகளும் இருப்பார்கள். அவர்களது நடைமுறைகளை மாற்ற வேண்டும். இல்லையென்றால் உயரதிகாரிகள் அவர்களை வேறு பணிக்கு மாற்றுங்கள் என்று கூறினார்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். d
மேலும், பெறப்படும் புகாருக்கு உடனடியாக சிஎஸ்ஆர்/எப்.ஐ.ஆர் கொடுக்கப்பட வேண்டும். புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்க கூடாது. சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் லத்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடக் கூடாது. காதல் திருமண விவகாரங்களில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகளையும் டேவிட்சன் தேவாசிர்வாதம் வழங்கியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர ஆணையர்கள், இணை, துணை ஆணையர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். aily
செய்தியாளர் மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி