உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க ஒப்புதல்!
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.28,602 கோடி முதலீட்டில் 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, உத்தரகாண்ட் மாநிலம் குர்பியா, பஞ்சாப் மாநிலம் ராஜ்புரா-பாட்டியாலா, மராட்டிய மாநிலம் திகி, கேரள மாநிலம் பாலக்காடு, உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ரா, பிரயாக்ராஜ், பீகார் மாநிலம் கயா, தெலுங்கானா மாநிலம் ஜஹீராபாத், ஆந்திர மாநிலம் ஓர்வகல், கொப்பார்த்தி, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்-பாலி ஆகிய இடங்களில் இந்த தொழில் நகரங்கள் அமைய உள்ளன.
இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
ரூ.28,602 கோடி மதிப்பீட்டில் தேசிய தொழில்துறை தாழ்வார மேம்பாட்டுத் திட்டத்தின் (NICDP) கீழ் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் தொழில்துறை நிலப்பரப்பு மாறும். இது பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை கணிசமாக அதிகரிக்கும்.
உலகளாவிய தரத்தில் பசுமையான நகரங்களாக அவை உருவாக்கப்படும். தொழில் முனைவோருக்கான நகரங்களாக அவை அமையும். ரூ.1.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கக்கூடிய வகையில் அமைக்கப்படும் இந்த தொழில் நகரங்கள் மூலம் நேரடியாக 10 லட்சமும், மறைமுகமாக 30 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.