ஈரோடு மாநாட்டுக்கு பக்கா ஏற்பாடு.. விஜய்க்கு நல்ல பெயர் வாங்கி தருவாரா செங்கோட்டையன்?
நாளை ஈரோட்டில் தமிழக வெற்றி கழகத்தின் "மக்கள் சந்திப்பு" நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்த மாநாட்டை தனது முழு பொறுப்பில் ஏற்று, பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த கூட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகளை அவர் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக கரூரில் நடந்த நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு பின்னடைவாக கருதப்பட்டது. அத்தகைய அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழ்ந்துவிட கூடாது என்பதில் செங்கோட்டையன் தலைமையிலான குழு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த 14 வெளியேறும் வழிகள், 40 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பாதுகாப்புப் படை என பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் புதுவையில் நடைபெற்ற மாநாடு எவ்வித அசம்பாவிதமும் இன்றி வெற்றிகரமாக முடிந்த நிலையில், ஈரோடு மாநாடும் அதேபோல் அமைதியாக முடிந்தால் அது விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரும் நற்பெயரை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பு கருதி இக்கூட்டத்திற்கு வரவேண்டாம் என்று செங்கோட்டையன் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஈரோடு மக்கள் சந்திப்பு மாநாடு வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், அது தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் உத்வேகத்தை தரும். இதன் மூலம், விஜய் அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதும் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தடையின்றித் தொடரவும், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கித் தனது வாக்கு வங்கியை வலுப்படுத்தவும் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.