
இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்.....!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை, மார்ச் 20 தேதியைச் சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. அதன்படி 2013 ஆம் ஆண்டு, மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து 'சர்வதேச மகிழ்ச்சி தினம்' கொண்டாடப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தைக் கொண்டாடுவதற்கான கருப்பொருளும் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்'. உலகில் உள்ள மக்கள் அனைவரும் எந்த பாகுபாடும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே இதன் பொருள்.
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துவிட்டது. உலகம் முழுவதும் இருக்கும் அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது. குழந்தைகள் பெரியவர் என்றில்லாமல் அனைவரையும் கொரோனா பாதித்துள்ளது. இந்நிலையில் மக்களிடையே இருக்கும் அச்சத்தை விலக்கி, மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த சர்வதேச மகிழ்ச்சி தினம் அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலகம் முழுவதும் 149 நாடுகளில் வாழும் மக்கள், அந்த நாட்டில் எந்த அளவிற்குச் சந்தோஷமாக வாழ்கின்றனர் என்பதை பல்வேறு காரணிகளை வைத்து மதிப்பீடிசெய்து, ஆண்டுதோறும் ஒரு பட்டியலை வெளியிட்டுவருகிறது. அதன்படி 2020-திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பின்லாந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 140-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 139-வது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூருகையில், உலகில் பெருவாரியான மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்கள் பரவி வருகிறது எனவும் மக்கள் தங்கள் உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.