இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல் விசாரணையின்போது உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக அதிரடியான கருத்துகளை தெரிவித்தார்.
வேல்முருகன் பேசுகையில், "திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அஜித் குமார் குடும்பத்தினரின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. ஒருவரது மரணம் காவல் துறை விசாரணையின்போது நிகழ்கிறது என்றால், அது காவல்துறையின் மிக மோசமான நடவடிக்கையை காட்டுகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்று தெரிவித்தார்.
"போலீஸ் விசாரணை மற்றும் காவல் நிலைய மரணங்கள் நிகழும்போது, அதற்கு காரணமான உயரதிகாரிகள் மீது நேரடியாக கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அஜித் குமார் மரண வழக்கை விரைந்து விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு சட்டத்தின் உட்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, "அஜித் குமார் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ₹1 லட்சம் வழங்க உள்ளோம்" என்று தெரிவித்த வேல்முருகன், அரசுத் தரப்பில் ₹1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.