
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் 21 வயது கிரிக்கெட் வீரர்
வாஷிங்டன் சந்தர்:-
"தமிழக கிரிக்கெட் வட்டாரத்தில் வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் திறன் பற்றி அனைவருக்குமே தெரியும். ஆனால், சர்வதேச அரங்கில் அதைக் காட்டுவதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் நிரூபித்திருக்கிறார்" என்று கூறினார் அவரது இளமை காலப் பயிற்சியாளர் எம்.செந்தில்நாதன்.
வாஷிங்டனின் இந்த சிறப்பான செயல்பாடு அவருக்கு ஆச்சர்யமாக இல்லை. ஏனெனில், அவர் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பத்திலேயே பேட்ஸ்மேனாகத்தான் தொடங்கியது. தமிழ்நாடு அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அவர் அறிமுகமானதே ஓப்பனராகத்தான்! 2016 ரஞ்சி கோப்பைத் தொடரில், மும்பை அணிக்கெதிரான போட்டியில் கேப்டன் அபினவ் முகுந்த் உடன் ஓப்பனராகக் களமிறங்கினார் வாஷிங்டன்.
அதே ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் டூட்டி பாட்ரியாட்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார் வாஷிங்டன். அவரது பேட்டிங் மட்டும் பௌலிங் திறன் முழுமையாக அறிந்ததால், அவரை இரண்டாவது ரவுண்டிலேயே வாங்கியது அந்த அணி. அணியின் ஓப்பனர் அவர்தான்.
"பள்ளி அளவிலான போட்டிகள், வயது பிரிவு போட்டிகள், முதல் டிவிஷன் என அனைத்து வகையான போட்டிகளிலுமே ஓப்பனராக இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர் அவர். அதனால், எந்த இரண்டாம்பட்ச யோசனையும் இல்லாமல் அணியில் எடுத்துவிட்டோம்," என்று கூறினார் அப்போது டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த மதனகோபால்.