
'இண்டீட்' எனும் வேலைவாய்ப்பு ஆய்வின் முடிவு..!
இந்தியாவில் 59% இந்தியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை விரும்பவில்லை என 'இண்டீட்' எனும் வேலைவாய்ப்பு வழங்கும் ஆன்லைன் தளம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் முடங்கிய நிலையில் தற்போது நிலைமை படிப்படியாகத் திரும்பி வருகிறது. எனினும் தற்போதுவரை ஒரு சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள பல மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய பரிந்துரைத்துள்ளன.
இந்த நிலையில் 67 சதவிகித பெரிய மற்றும் 70 சதவிகித நடுத்தர அளவிலான இந்திய நிறுவனங்கள், தொலைதூரத்தில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளன.
இதுவே உலக அளவில் இந்த விகிதம், பெரிய நிறுவனங்களில் 60%, நடுத்தர நிறுவனங்களில் 34% என்ற அளவில் உள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தின் தற்காலிகத் தீர்வாக வீட்டில் இருந்து வேலை செய்ய பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பொதுமுடக்கத்திற்குப் பின் முழுவதுமாக அலுவலகச் சூழலுக்கு திரும்புவோம் என்ற நிலையிலே பெரும்பாலானோர் உள்ளனர்.
45 சதவிகிதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்த இடம்பெயர்வு தற்காலிகமானது என்றும் 50 சதவிகித ஊழியர்கள் தங்கள் சொந்த இடத்திலிருந்து அலுவலகச் சூழலுக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு 29 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புவதாக 24 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். 9 சதவீதம் பேர் மட்டுமே தாங்கள் வீட்டில் இருந்து நிரந்தரமாக வேலை செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
அதேபோன்று சம்பளக் குறைப்பு குறித்து 88 சதவீத மூத்த நிலை ஊழியர்கள் சம்பளக் குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். தற்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் 61% பேர் சம்பளக் குறைப்பை விரும்பவில்லை என்று ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.