dark_mode
Image
  • Monday, 06 October 2025

அறநிலைய துறை சார்பில் காதல் திருமணங்கள்: உதயநிதி

அறநிலைய துறை சார்பில் காதல் திருமணங்கள்: உதயநிதி

சென்னை: ''அறநிலைய துறையா, அன்பு நிலைய துறையா என்ற வகையில், ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில் அதிக அளவில் காதல் திருமணங்கள் நடத்தப்படுகின்றன,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

 

அறநிலைய துறை யில் உள்ள, சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில், 32 ஜோடி திருமணம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீஸ்வரர்- - கற்பகாம்பாள் மண்டபத்தில் நேற்று நடந்தது.

துணை முதல்வர் உதயநிதி, திருமணத்தை நடத்தி வைத்து பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

அப்போது, மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:

என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மணமக்களிடம் பேசிய போது, அவர்கள் காதல் திருமணம் என தெரிவித்தனர். காதல் திருமணத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் எனக்கு தெரியும். எனக்கும் காதல் திருமணம்தான். முதலில் பெண் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டும். பின்னர், பெண்ணின் அப்பா, அம்மா ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்த வேண்டும்.

அதற்கு அடுத்து, பெண்ணின் மாமா, சித்தப்பா என்று எல்லாரும் கிளம்பி வருவர்.

ஏதேனும் ஒரு பிரச்னையை இழுத்து விடுவர். அவர்கள் அனைவரது சம்மதத்தையும் வாங்கிய பின், பெண் முடியாது என்று மறுத்து விடுவார்.

இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன.

அவற்றை எல்லாம் சமாளித்து, இந்த திருமணங்கள் நடக்கின்றன. இங்கு நடக்கும் திருமணங்களில் பெரும்பாலானவை காதல் திருமணங்கள்தான். இது அறநிலைய துறையா அல்லது அன்பு நிலைய துறையா என்ற வகையில், அதிக அளவில் காதல் திருமணங்கள் நடக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

related_post