அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று (மாா்ச் 3) நடைபெற்றுவரும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் 43,051 மையங்களில் நடைபெறும் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்... நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி!" எனத் தெரிவித்துள்ளார்.
முகாம் நாளில் பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.