அதிமுகவை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது : அடித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்தன. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டது என இபிஎஸ் விளக்கம் அளித்தார். இதுவரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடந்த வரலாறே இல்லாத சூழலில், 2026ஆம் ஆண்டு அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியைப் பொருந்தாக் கூட்டணி என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. அதிமுகவை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் வளர முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன. அண்மையில் இந்து முன்னணி மேடையில் அண்ணா விமர்சனம் செய்யப்பட்டதை முன்வைத்தும் அதிமுக - பாஜக கூட்டணியை திமுக விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி , “அதிமுக இத்தோடு முடிந்துவிடும் என ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. நாட்டை காப்பதற்கு ராணுவம் போல அதிமுகவை வெற்றிபெறச் செய்ய சிப்பாய்களாக தொண்டர்கள் உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். அதிமுகவின் பூத் கமிட்டி ஏஜெண்ட் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 25 வாக்குகளைப் பெற்றுத் தர வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமையும். முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கூட பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டீர்களா என்று ஸ்டாலின் பதறுகிறார். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலினுக்கு என்ன கவலை? பாஜக - அதிமுக கூட்டணி வைத்த உடனேயே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது, அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாக்குகள் சிதறாமல் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டது. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. 31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்துவிட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவை அழிக்க கருணாநிதி எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால், அனைத்தையும் முறியடித்தோம். கருணாநிதியாலேயே அதிமுகவை ஒழிக்க முடியவில்லை. ஆகவே, ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது.
எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்ற பிறகு 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது என்று ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், 2011 முதல் 2021 வரை எத்தனை முறை திமுக தோல்வி அடைந்தது என்று அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். 2011ஆம் ஆண்டு எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல் போனது திமுக. ஆகவே, அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவுக்கு தகுதியில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும்” என்று பேசினார்.