
அசாமில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: பிரியங்கா காந்தி
தேஸ்பூர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அசாமில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.அசாம் சட்டசபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27-ம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசாமின் தேஸ்பூரில் நடந்த பேரணியில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், இங்கு குடியுரிமை சட்டம் செயல்படுத்தமாட்டோம் என்ற சட்டம் இயற்றப்படும். ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதத்திற்கு ரூ.2,000 வழங்குவோம். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ.365 வழங்கப்படும். 5 லட்சம் புதிய அரசு வேலைகளை உருவாக்குவோம். இவை அனைத்தும் வாக்குறுதிகள் அல்ல, உத்தரவாதம். இவ்வாறு அவர் பேசினார்.