EPS: ஈசிஆரில் காரில் துரத்தப்பட்ட பெண்கள்.. குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி லைசென்சா? - விளாசும் ஈபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமி: சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்திச் சென்ற சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி: சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்திச் சென்ற சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.
பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா? #யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த திரு. ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்? மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description