9 தென்மாவட்டங்களுக்கு வார்னிங்.. இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. அலர்ட் தந்த வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 9 தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, கன்னியாகுமரி, தென்காசி உள்பட பல இடங்களில் கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது.
நேற்றைய தினம் தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது.
மதுரையில் நேற்று மாலை 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதோடு நேற்றைய தினம் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணிநேரத்தில் மொத்தம் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் பல குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் தென்தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது. கேரளா கடற்கரையையொட்டி அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவுரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தான் தென்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ''தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், நாளை முதல் அக்.31-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.