dark_mode
Image
  • Friday, 07 March 2025

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் என்.ஆர் காங்கிரஸ் போட்டி; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் என்.ஆர் காங்கிரஸ் போட்டி; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஆட்சி மீது நம்பிக்கை உள்ளது; தமிழகத்திலும் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடும் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி முதலமைச்சரும், கட்சியின் தலைவருமான ரங்கசாமி கட்சி கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

 

தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “சொன்னதை செய்யும் அரசாக உள்ளது. எதிர்கட்சி, ஆளும் கட்சி என வேறுபாடுகள் இன்றி அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. குறைகள் இருந்தால் அதை அரசு சரிசெய்யும். இறைவன், சித்தர்கள், அப்பா பைத்திய சாமி அருளால் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

 

முதற்கட்டமாக 11-தொகுதிகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைத்து தொகுதிகளிலும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருவதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

 

புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஆட்சி மீது நம்பிக்கை உள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும், இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

 

இந்த விழாவில் என்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

comment / reply_from

related_post