புதுமைப் பெண், மண்ணின் மகள் திட்டங்கள்: புதுச்சேரி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
ஆதிதிராவிட பெண்களுக்கு முதல்வரின் புதுமைப் பெண் திட்டத்தில் மின் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் வரை மானியம் தரப்படும்.
அதேபோல் மண்ணின் மகள் திட்டத்தில் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி தரப்படவுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: முதலமைச்சரின் புதுமை பெண் என்ற திட்டத்தின் கீழ் பணிக்குச் செல்லும், கல்லூரிக்குச் செல்லும் ஆதிதிராவிட பெண்கள் 500 பேருக்கு 75 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் நிதியில் மின்சார வாகனங்கள் வழங்கப்படும். பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் வராத ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு காமராஜர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும்.
கற்றல் அனுபவத்தை மேம்படுத்த 5 முதல் 9-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும். முதல்வரின் கிராமம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் ஆதிராவிடர், பழங்குடியினர் 50 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள 10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு கிராம உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
மண்ணின் மகள் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுடைய பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் ஆதிதிராவிட, பழங்குடியின வீரர்களின் முழுச் செலவையும் அரசே ஏற்கும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவியரின் பெற்றோருக்கு தற்போது வழங்கப்படும் ரூ.3 ஆயிரம் வாய்ப்பு ஊதியத்தொகை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.ஆயிரம் ஊக்கத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.5 ஆயிரமாகவும், 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.2,500லிருந்து ரூ.8 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
வெளிநாட்டில் கல்வி படிக்கும் புதுவை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி கல்வி உதவித்தொகை வழங்கப்படும். காமராஜர் நகரில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு புதிய விடுதி கட்டப்படும். யாசகம் எடுப்போர் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு தங்குமிட வசதி, விழிப்புணர்வு தரப்படும்.
அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தை வளர்ச்சியை கண்காணிக்க ரூ.78 லட்சத்தில் குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் இயந்திரம் வழங்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி மையங்கள் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாற்றப்படும். பேருந்து, ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையம் அமைக்கப்படும்.
குழந்தைகளுக்கு இணைய வழி அச்சுறுத்தலை தடுக்க பாதுகாப்பான ஆன்லைன் பயிற்றுவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடர்பாக நிர்வாக விதிமுறைகளில் ஒருமுறை தளர்வு அளித்து, விண்ணப்பங்களை பரிசீலிக்க ஒப்பீட்டு சேவை பயன் கொள்கையை உருவாக்க அரசு ஆராய்ந்து வருகிறது. செயல்படாத நிறுவனங்களின் மனித வளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உகந்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
அரசு நிதி பற்றாக்குறை, மொத்த உற்பத்தி மதிப்பு, கடன்விகிதம் போன்ற நிதிநிலை குறியீடுகளை வரையறைக்குள் பராமரித்து வருகிறது. கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பு நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.