dark_mode
Image
  • Friday, 29 November 2024

நிர்வாகத்தில் சிரமம்; புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக டெல்லி செல்லலாம்: முதல்வர் ரங்கசாமி பேச்சு

நிர்வாகத்தில் சிரமம்; புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக டெல்லி செல்லலாம்: முதல்வர் ரங்கசாமி பேச்சு

திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாததற்கு காரணம் மாநில அந்தஸ்து இல்லாததுதான். இதர மாநிலங்களில் இந்த சிரமம் இல்லை.

நிர்வாகத்தில் சிரமம் உள்ளது. மாநில அந்தஸ்துக்காக டெல்லி செல்லலாம். நாடாளுமன்றத்தில் புதுச்சேரி எம்.பி.,க்கள் குரல் கொடுக்கவேண்டும்' என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர், 'ஆளுநர் உரை கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், புதிய ஆண்டில் வரப்போகும் திட்டங்களை கோடிட்டு காட்டுவதாகவும், ஆலோசனை வழங்குவதாகவும் இருக்கும். அந்த அடிப்படையில் இந்த ஆளுநர் உரையும் இருந்தது. எதிர்க்கட்சிகள் சபையில் பேசும்போது, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பேசினர். அதுதான் எம்எல்ஏக்கள், மக்களின் எண்ணமாகவும் உள்ளது.

ஆட்சி பொறுப்பிலிருந்து பார்க்கும்போதுதான் எத்தனை சிரமங்கள் உள்ளது என்பது தெரியும். கடந்தமுறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தாலும், மத்திய அரசு நிச்சயமாக மாநில அந்தஸ்து தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

புதுவையை பொறுத்தவரை ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது அவசியமானது. இது கடந்த காலங்களில் மறைமுகமாக இருந்தது. கடந்த ஆட்சியில் உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், ஆளுநருக்கே அதிகாரம் என்பது வெளிப்பட்டது. இதனால் மாறுபட்ட கருத்து ஏற்பட்டால், கோப்பு காலதாமதமாகிறது. நாம் அனுப்பும் கோப்பு இளநிலை எழுத்தர் முதல் தலைமைச்செயலர் வரை அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். எம்எல்ஏக்கள் கோப்புகளை தேடிச்செல்லும்போது இதை அறிந்திருப்பார்கள்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அதிகாரம் இல்லாததால் ஒரு திட்டத்தை உடனடியாக அமல்படுத்தவோ, செயல்படுத்தவோ முடிவதில்லை. நாடாளுமன்றத்தில் நமது எம்பி.,க்கள் மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுக்க வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறேன். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் மாநில வளர்ச்சி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நாட்டிலேயே நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரியான மாநிலமாக உள்ளோம்.

தனி நபர்களின் வருமானம் உயர்ந்துள்ளது மூலம் இதை தெரிந்துகொள்ளலாம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பல்வேறு வகையிலும் கவனம் செலுத்துகிறோம். 3 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என நினைப்பதை, 3 ஆண்டுகளாகியும் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. கரசூரில் புதிய பொருளாதார மண்டலம் உருவாக்க நிலம் கையகப்படுத்தினோம். இந்த திட்டம் கைவிடப்பட்டதால் நிலத்தை மீண்டும் பெற்றுள்ளோம்.

இங்கு பல தொழிற்சாலைகளை கொண்டுவந்து வேலைவாய்ப்பு அளிக்க முடியும். ரோடியர், சுதேசி, பாரதி மில் இடங்களையும் பயன்படுத்தலாம். ஐடி நிறுவனம், பஞ்சாலை கொண்டு வரும் திட்டமுள்ளது. பாசிக், பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக பல சலுகைகள், திட்டங்களை அறிவித்தோம். ஆனால் இன்று சம்பளமே போட முடியாத நிலை உருவாகிவிட்டது. இதை நினைக்கும்போது கடுமையான கோபம் வருகிறது. ஆனாலும், இவற்றை இயக்கவும், செயல்படுத்தவும் என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்வோம்.

ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்குவோம். சிறு குறைகள் இருக்கலாம். அதை முழுமையாக செய்யாததற்கு காரணம் மாநில அந்தஸ்துதான். இதர மாநிலங்களில் இந்த சிரமம் இல்லை. நிர்வாகத்தில் சிரமம் உள்ளது' என்று பேசினார்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா, 'டெல்லி சென்று பேசலாம். இண்டியா கூட்டணி 40 எம்பிக்கள் டெல்லியில் இருக்க சொல்கிறோம். அவர்களுடன் சந்திக்கலாம்' என்றார்.

அதற்கு முதல்வர் ரங்கசாமி, 'டெல்லி செல்லலாம். நாடாளுமன்றத்தில் பேசி வலியுறுத்தலாம். நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்க முடியும். நமக்காக குரல் கொடுக்கலாம். அனைத்து எம்எல்ஏக்கள் எண்ணமும் அதுதான். வளர்ச்சி வரவேண்டும்' என்று குறிப்பிட்டார்.

நிர்வாகத்தில் சிரமம்; புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக டெல்லி செல்லலாம்: முதல்வர் ரங்கசாமி பேச்சு

comment / reply_from

related_post

newsletter

newsletter_description