15 ஆண்டுகளுக்குப் பின் திருச்சியை மிரட்டும் வெள்ளம்! நிரம்பிய கோரையாறு..!
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், கடந்த 48 மணி நேரத்தில் நகரில் கனமழை பெய்யாத நிலையிலும், பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் வடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளதால், நகரின் மற்ற பகுதிகளிலிருந்து குடியிருப்பு வாசிகள் துண்டிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய மாலை நிலவரப்படி குடமுருட்டி ஆற்றில் சுமார் 25,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் உறையூர், வயலூர் சாலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிரம்பி வழியும் கோரையாற்றில் பஞ்சப்பூர் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதேபோல், மணப்பாறை மற்றும் பொன்னனியாற்றில் இருந்து உபரி நீரை சேகரிக்கும் அரியாறு நிரம்பி வழிந்து புறநகரில் உள்ள தீரன் நகர் மற்றும் பிராட்டியூர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, கருமண்டபத்தில் உள்ள கொல்லங்குளம் குளத்து நீர், கோரையாற்றில் கலந்ததால் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும், வார்டு 60-ல் உள்ள செல்வம் நகர், லிங்கம் நகர், வின்ஸ் அன்பு அவென்யூ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய குழுமணி சாலையில் வசிக்கும் மக்கள், திருச்சி மாநகராட்சியின் அவல நிலை குறித்து குற்றம் சாட்டுகின்றனர். வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளே வெள்ளத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. உபரி நீரை வெளியேற்ற, வாய்க்கால்களை தூர்வார தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.