1 ரூபாய், 2 ரூபாய் பழைய நாணயங்கள் லட்சம் ரூபாய்க்கு விலை போகிறதா..?
பழைய ஓரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் மற்றும் 786 என முடியும் பணத்தாள்கள் பல லட்சம் ரூபாய்க்கு விலை போவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் வலம் வருகின்றன. இவை உண்மையில் அரியவகையானவையா? இவ்வாறு பரப்பப்படுவது ஏன்? என்பதை பார்க்கலாம்.
786 என்று முடியும் பணத்தாள்கள் இருக்கிறதா? அவை பல லட்சம் ரூபாய் விலை போகக்கூடியவை என்றும், பழைய ஒரு ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள், மாதா வைஷ்ணவி தேவி உருவம் பொறித்த நாணயங்கள் அரிதானவை, அதிர்ஷ்டமானவை, வாஸ்து எண் என சமூக வலைதளங்களில் பலவித வதந்திகள் உலவி வருகின்றன. 786 என்று முடியும் பணத்தாள், பல ஆயிரங்களுக்கு விலை போகும் என்றும் சமூக வலைதளங்களில் மோசடிகள் நடந்து வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் பணத்தாள்கள், நாணயங்களில் ஒரே சீரியல் எண், ஒரே விதமானவையாக இருக்கும் நிலையில், இதில் அரிதானது? அதிர்ஷ்டமானது போன்ற வதந்திகளை புறந்தள்ள வேண்டும் என்கிறார்கள் நாணய சேகரிப்பாளர்கள்.
மாதா வைஷ்ணவி உருவம் பொறித்த நாணயங்களை கோடிக்கணக்கில் ரிசர்வ் வங்கி அச்சிட்ட நிலையில் ஒருநாணயம் எப்படி பத்து லட்சம் ரூபாய் வரை விலைபோகும் என்ற கேள்வியும், சந்தேகமும் மக்களுக்கு மனதில் எழவேண்டும் என்றும் நாணய சேகரிப்பாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
கடவுள் உருவம் பொறித்த 25 ரூபாய் வெள்ளி நாணயத்தை 2012 ல் மத்திய அரசு வெளியிட்டது. பொதுப் பயன்பாட்டுக்கு வராத, சிறப்பு வெளியீடான இந்த நாணயத்தின் விலை 3,600 ரூபாய் எனும் நிலையில், சாதாரணமாக புழக்கத்தில் உள்ள பத்து ரூபாய் நாணயம் எப்படி பத்து லட்சம் ரூபாய்க்கு விலை போகும் என்ற கேள்வியையும் நாணயவியலாளர்கள் எழுப்புகிறார்கள். இதுபோல பொய்களையும், வதந்திகளையும் பரப்புகிறவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.