ஸ்பேஸ் எக்ஸ்: 7வது ராக்கெட் சோதனை முயற்சியில் ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 7வது ராக்கெட் சோதனை முயற்சியில் ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை செய்து அசத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜன.,16) 7வது முறையாக அந்த ராக்கெட் சோதிக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
சற்று நேரத்துக்கு பிறகு ராக்கெட் இரண்டாக பிரிந்து பூஸ்டர் பகுதி பூமியை நோக்கி செங்குத்தாக கீழே இறங்க தொடங்கியது. ஆனால், அதன் பிறகு, 8.5 நிமிடங்களில் ஸ்டார்ஷிப்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது கரீபியன் கடல் பகுதியில் வெடித்து சிதறி விழுந்தது. இது ஸ்பேஸ் எக்ஸ் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இதுபோன்ற சோதனையின் மூலம் நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி கிடைக்கும். மேலும் இன்று ஸ்டார்ஷிப் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க இந்த பூஸ்டர் நமக்கு உதவிகரமாக இருக்கும்,' என தெரிவித்துள்ளது.
ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு மேலாளர் டான் ஹூட் கூறுகையில், 'அனைத்து தரவுகளையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிய சிறிது காலம் எடுக்கும்', எனக் கூறினார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description