மீரா ஜாக்சனுக்கு ஜாமீன் வேணுமாம்.. கோவை மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மனு..!
கோவை மாணவி தற்கொலை வழக்கு விவகாரத்தில், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைதாகி சிறையில் உள்ள நிலையில், ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.
கோவை மாணவி தற்கொலை விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவேசம் அடங்காமல் உள்ளது.
ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியின் 17 வயது மாணவியின் தற்கொலைக்கு காரணம், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி தந்த பாலியல் தொல்லைதான் என்பது வெட்ட வெளிச்சமாகியது.
6 மாதமாக மனஉளைச்சலில் மாணவி தவித்து வந்ததாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.. ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள் என்று எழுதப்பட்ட மாணவியின் கடைசி கடிதமும், அதில் உள்ள பெயர்களும் வலுவான சாட்சியாக அமைந்துவிட்ட நிலையில், அது தொடர்பான விசாரணையை போலீஸ் கையில் எடுத்துள்ளது.. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.. பிறகு அவரை கோவை ஆர்எஸ்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, துணை கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பள்ளி முதல்வரிடம் போலீசார் பல கேள்விகளை எழுப்பியிருந்ததாக தெரிகிறது.
இறந்து போன மாணவி எப்போது பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தார்? அப்புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? பெற்றோருடைய அனுமதியில்லாமல் மாணவியை கவுன்சிலிங் அழைத்து சென்றது ஏன்? இறந்த மாணவி, மிதுன் சக்கரவர்த்தியிடம் பேசிய ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு 2 மாணவிகள் யார் யார்? அவர்களும் புகாரளித்துள்ளனரா, பாதிக்கப்பட்டுள்ளனரா?; மிதுன் சக்கரவர்த்தி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியது ஏன்? என்பன கேள்விகள் மீராவிடம் எழுப்பப்பட்டதாக தெரிகிறது.
அதற்கெல்லாம் மீரா ஜாக்சன் பதில் அளிக்கவும், அவைகளை அதனை போலீசார் வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.. இதையடுத்து, வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் மீராவை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. இதனிடையே, மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் உண்மை தன்மையை அறிய தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்... ஆனால், வழக்கறிஞர்கள் 4 நாள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளை அவமதித்த நீதிபதியை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் இந்த 4 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக மனுவை வரும் நவம்பர் 22-ம் தேதி போக்சோ நீதிமன்றம் மீரா ஜாக்சனின் ஜாமீன் மனுவை விசாரிக்கவுள்ளது.