மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு: சபரிமலை ரயில் திட்டம் மீண்டும் முன்மொழிவு
சபரிமலை ரயில் பாதை திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டிச.,17-ல் மூன்று மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனைக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராய் விஜயன் கூட்டி உள்ளார்.
சபரிமலை ரயில் பாதை பக்தர்களின் நீண்ட கால கனவாக உள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை ரயில்வே தயாரித்து மாநில அரசிடம் 392 எக்டேர் நிலத்தை கையகப்படுத்தி தரும்படி கூறியிருந்தது. ஆனால் 24 எக்டேர் மட்டுமே மாநில அரசு கையகப்படுத்தி உள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்காக 282 கோடி ரூபாய் ஒதுக்கியதாக மத்திய ரயில்வே அமைச்சகம் கேரள அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது. ஆனால் 2019-ல் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பணம் செலவழிக்க முடியவில்லை என்று மாநில அரசு கூறுகிறது.
இதற்கிடையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டிச.,17-ல் திருவனந்தபுரத்தில் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் பினராய் விஜயன் கூட்டி உள்ளார். 1996-ல் அங்கமாலி - - எருமேலி ரயில் பாதைக்கு சர்வே நடந்தது. 1997 -ல் ரயில்வே இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 111 கி.மீ., துாரமுள்ள இந்த ரயில் பாதையில் 7 கி.மீ., துாரத்துக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டு காலடியில் ஒரு ரயில்வே ஸ்டேஷனும் பெரியாற்றின் குறுக்கே ஒரு பாலமும் கட்டப்பட்டது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு சென்றதால் 2007 - ல் கோட்டயம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் திட்டத்தின் மதிப்பீடு அதிகரித்துக் கொண்டே போனது. மொத்த செலவில் 50 சதவீதம் மாநில அரசு செலுத்த வேண்டும் என்று ரயில்வேத்துறை நிபந்தனை விதித்தது.
இதற்கு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அங்கீகாரம் வழங்கியது. ஆனால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் வந்த இடதுசாரி முன்னணி அரசு 50 சதவீத செலவை வழங்க முடியாது என்ற முடிவுக்கு வந்தது. திட்டத்தின் தேசிய முக்கியத்துவம் கருதி ரயில்வே தனது சொந்தச் செலவில் இதை செயல்படுத்த வேண்டும் என்று கூறியது .
2016ல் பிரதமரின் சுற்றுச்சூழல் நிலையில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டது. அப்போது இதன் திட்ட மதிப்பீடு 2050 கோடியில் இருந்து 2815 கோடி ரூபாயாக அதிகரித்தது. மாநில அரசு போதிய ஆர்வம் காட்டாததால் 2019-ல் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்தது.
இறுதியில் ஒரு வழியாக 2021 ஜனவரியில் 50 சதவீத செலவு தொகை வழங்கலாம் என்று மாநில அரசு முடிவு எடுத்து கேரளா கட்டமைப்பு முதலீட்டு கழகத்திலிருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்த நிலையில் தான் 2023 பட்ஜெட்டில் மத்திய அரசு யாரும் எதிர்பார்க்காத வகையில் 100 கோடி ரூபாய் ஒதுக்கியது. மேலும் வந்தே பாரத் ரயில் ஓடும் வகையில் மதிப்பீடு திருத்தப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தின் புதிய மதிப்பீடு 3810 கோடி ரூபாய்.