கேரளா மார்கெட்டிங் நிறுவனத்தின் கொடூரம்: இலக்கு முடியாத ஊழியர்களை நாய் போல் நடத்தியது குறித்து பரவும் புகார்

கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மார்கெட்டிங் நிறுவனம் ஊழியர்களிடம் கொடூரமாக நடந்து கொள்வதாக வெளிவந்த புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், நிறுவனம் வழங்கும் தயாரிப்புகளை விற்பனை செய்து, ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அந்த இலக்கை அடைய முடியாத நிலையில், ஊழியர்களுக்கு கீழ்த்தரமான மற்றும் கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோக்களில், ஊழியர்கள் கழுத்தில் சங்கிலி கட்டப்பட்டு, நாய்களை போல் இழுத்து நடக்கச் சொல்லப்படுவது போன்ற துயரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நாயைப் போல் நடக்க வேண்டும், தரையில் தூசியை நக்க வேண்டும், நாய் போன்று குரைக்க வேண்டும் என்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற செயல் முறைகள், ஊழியர்களின் மனித உரிமைகளை புறக்கணித்து, அவர்களின் தன்மானத்தைக் குலைக்கும் வகையில் இருப்பதாக பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக அகில இந்திய தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அகில இந்திய ஊழியர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் ஆகிய வழக்கறிஞர் P. Albin Mano வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்த வகையான செயல்கள் முற்றிலும் தண்டிக்கப்பட வேண்டியவை. ஒரு ஊழியரின் உழைப்பை மதிக்காமல், அவர்களை அவமானப்படுத்தும் இந்த செயல் முறை மனிதாபிமானத்துக்கு விரோதமானது. இது போன்ற நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து, பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை அந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் மேலாளர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், வீடியோவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை விசாரணை ஆரம்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் விளக்கம் கோரப்பட இருக்கிறது. தொழிலாளர்களிடம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், நிறுவனத்தின் அடிப்படை முறைகள் குறித்து ஆய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையை, அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதையின்மையை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்தில் கொண்டுவந்துள்ளது.
மனிதாபிமானம் என்பது எங்கு வேண்டுமானாலும் தவிர்க்க முடியாத ஒன்று. தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்காத எந்த அமைப்பும் நம் சமூகத்தில் இடம் பெறக்கூடாது என்ற வலியுறுத்தல் இச்சம்பவம் மூலம் வலிமையாக முன்வைக்கப்படுகிறது.
செய்தியாளர்: மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description