மேலும் 8 நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார் அதிபர் டிரம்ப்; புதிய வரி விதிப்பு பட்டியல் இதோ!

வாஷிங்டன்: 14 நாடுகளுக்கு வரி விதிப்பை தொடர்ந்து தற்போது பிரேசில் உட்பட 8 நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். குறிப்பாக பிரேசிலுக்கு 50% வரி விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், ஜூலை 9ம் தேதி வரை இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன் அவர், அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கான கெடுவை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையே, முதற்கட்டமாக வங்கதேசம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த வரி விதிப்பு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
14 நாடுகளை தொடர்ந்து, தற்போது பிரேசில் உட்பட 8 நாடுகளுக்கு அதிக வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பிரேசில், அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகளுக்கு, புதிய வரி விதிப்பு குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
* பிரேசில் மீது 50% வரி,
* அல்ஜீரியா, ஈராக், லிபியா மற்றும் இலங்கை மீது 30% வரி,
* புருனே மற்றும் மால்டோவா மீது 25% வரி
* பிலிப்பைன்ஸில் மீது 20% வரி
பிரேசிலிய இறக்குமதிகள் மீதான 50% வரி உட்பட அனைத்து புதிய வரிகளும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்