நடிகரும் திமுக எம்.பி.யின் சகோதரருமான மனோகர் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் எழுத்தாளரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் உடலுக்கு முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1993ம் ஆண்டு வெளியான 'பேண்டு மாஸ்டர்' படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு, ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான 'கோலங்கள்' படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.
அந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த 'தென்னவன்' படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.
2009ம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த 'மாசிலாமணி' படத்தை இயக்கினார். அதன் பிறகு நந்தா நடிப்பில் வெளியான 'வேலூர் மாவட்டம்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது தவிர 'சலீம்', 'என்னை அறிந்தால்', 'நானும் ரவுடிதான்', 'வேதாளம்', 'மிருதன்', 'கைதி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆர்.என்.ஆர் மனோகர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஆர்.என்.ஆர்.மனோகர் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஆர்.என்.ஆர் மனோகர் உடலுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.