தஞ்சாவூர் இளைஞர் கைது – தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக மதுரைக்கு கடத்தப்பட்ட 8 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
தஞ்சாவூர் சக்கரப்பள்ளி இளைஞர் கைது – தாய்லாந்திலிருந்து இலங்கையின் கொழும்பு வழியாக மதுரைக்கு கடத்தப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தாய்லாந்திலிருந்து இலங்கையின் கொழும்பு வழியாக மதுரைக்கு வந்த ‘ஸ்ரீலங்கன்’ விமானத்தில் கடத்தல் பொருட்கள் வருவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் தஞ்சாவூர் சக்கரப்பள்ளியைச் சேர்ந்த முஹம்மத் மைதீன் (26) மற்றும் சென்னை சாகுல் ஹமீது (50) ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. இருவரின் சுமைகளைப் பரிசோதித்தபோது தலா 4 கிலோ என மொத்தம் 8 கிலோ உயர் தர கஞ்சா மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 8 கோடி ரூபாயாகும். இருவரையும் சுங்க நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர்.
விசாரணையில், தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக இந்தியாவுக்குள் கஞ்சா கடத்தும் சர்வதேச வலையமைப்பின் சார்பாக இவர்கள் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.
மதுரை சுங்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து, சம்பவம் குறித்தும் வலையமைப்பில் உள்ள பிறரையும் அடையாளம் காண தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.