சென்னை மாநகராட்சி அறிவிப்பு : நெரிசலில் சிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையதளப் பதிவு.!!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோவிட் தடுப்பூசி மையங்களில் நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யும் இணையதள வசதியினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
''பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோவிட் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ என்ற இணையதள இணைப்பினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு இன்று (24.06.2021) ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தலைமை வகித்தார். சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, முன்னிலை வகித்தார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் மாநகராட்சியின் புதிய உத்திகளைக் கையாண்டு பொதுமக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சென்னை இன்னோவேஷன் ஹப் (Chennai Innovation Hub) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் CHUB சார்பில் மாநகராட்சி இணையதளத்தில் https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ என்ற புதிய இணையதள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதள வசதியின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையத்தினைத் தேர்வு செய்து, அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், என்ற 044-4612 2300 என்ற தொலைபேசி எண்ணிலும், 94999 33644 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்புகொண்டு தடுப்பூசி மையங்கள் மற்றும் அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.