கன்னியாகுமரியில் வெளுக்கும் கனமழை.. அடுத்த 2 மணி நேரத்துக்கும் கொட்டித் தீர்க்கும்.. வானிலை அலர்ட்!
கன்னியாகுமரியில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் குமரி மாவட்ட மக்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராம், மைலாடி, தென் தாமரைக்குளம், நாகர்கோவில், செட்டிகுளம், கோட்டார், கம்பளம், ஆசாரிப்பள்ளம், பார்வதிபுரம், புத்தேரி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரமாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து நான்கு நாள் தொடர் விடுமுறை என்பதால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு குடும்பத்துடன் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர். அந்தவகையில் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளும் சிரமமடைந்துள்ளனர். கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களிலும் இன்று இரவு 7 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, திருவாரூர், கோவை, திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், நாகை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.