எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க.. புஸ்ஸி ஆனந்த் விஜய்-க்கு உண்மையா இல்லை.. தவெக நிர்வாகி புகார்!

திருவண்ணாமலை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பணம், சாதி மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த்-க்கு விஸ்வாசமாக இருப்பவர்களுக்கு மட்டுமே பொறுப்பு அளிக்கப்படுவதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த தவெக நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெக தலைவர் விஜய் வைத்த நம்பிக்கைக்கு உண்மையாகவும் இல்லை என்று விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சியின் கட்டமைப்பை பலமாக்குவதற்காக நிர்வாகிகள் நியமனத்தை விரைவாக நடத்த வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தவெக மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே தேனி மாவட்டத்தின் மகளிர் அணி நிர்வாகி வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். தற்போது திருவண்ணாமலையைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஹரிஷ், கட்சியினரை நாய் மாதிரி நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோவில், தலைவர் விஜய் சுற்றி தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறது. பொதுச்செயலாளர் ஆனந்த்-ஐ 100 சதவிகிதம் நம்புகிறார் விஜய்.
ஆனால் விஜய்-க்கு பொதுச்செயலாளர் ஆனந்த் விஸ்வாசமாக இல்லை. பணம், சாதி, விஸ்வாசம் ஆகிய 3 விஷயங்களை அடிப்படையாக வைத்தே பதவி அளிக்கப்படுகிறது. விஸ்வாசம் என்பது விஜய்-க்கு விஸ்வாசமாக இருப்பவர்கள் அல்ல. பொதுச்செயலாளர் ஆனந்த்-க்கு விஸ்வாசமாக இருப்பவர்களுக்கு தான் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை ஆரணி பகுதியில் 15 பேருக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக நிர்வாகி ஒருவரின் மகனான சத்யா என்பவருக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கட்சியில் இணைந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகிறது. அவர் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து வந்து தவெகவில் இணைந்தவர். அவருக்கு எதற்காக பதவி அளிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியவில்லை.
தவெக தலைவர் விஜய் தனியாக ஆலோசித்து பொறுப்பு அளிப்பதாக கூறுகிறார்கள். நிச்சயம் அப்படி நடக்கவில்லை. பொதுச்செயலாளர் ஆனந்த் கை காட்டுபவருக்கு தான் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாக மக்கள் இயக்கத்தில் இருக்கிறேன். ஆனால் நான் கட்சியில் இல்லை என்று கூறுகிறார்கள். என்னை ரவுடி என்று சொல்லி துரத்துகிறார்கள்.
மக்கள் இயக்கத்தில் இருந்த 50 சதவிகிதம் பேர் தவெகவில் இருந்து வெளியேறிவிட்டார்கள். கட்சித் தலைமை எங்களை நாய் மாதிரி நடத்துகிறது. அவர்களுக்கு பிடித்தவர்கள் மட்டுமே கட்சி அலுவலகம் உள் செல்ல முடியும். ஆனந்தை சந்திக்க முயன்ற போதும், சந்திக்க வாய்ப்பு அளிக்க மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description