6வது நாளாக உண்ணாவித போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்; குழு அமைக்க முதல்வர் உத்தரவு
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என இரு கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தனர். இதனிடையே உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பலரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது வரை 180க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்படும். நிதித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள்.
இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் பெயரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.