134 நாட்கள் சிறைவாசம்.. யூடியூபர் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற்றதால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், உடனடியாக பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி யூடியூபர் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 14ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவைக்கு கொண்டு சென்று கோவை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரும், சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இதனிடையே திருச்சி, பெரம்பலூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தாம்பரம், சேலம், நாகப்பட்டினம், நெல்லை, நீலகிரி ஆகிய நகரங்களில் 16 காவல் நிலையங்களில், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே கரூரில் பண மோசடி வழக்கிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கரூர், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவபர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம் 7 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. இதேபோல் கோவை சைபர் கிரைம் வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது. அத்துடன் டெல்லியில் உச்ச நீதிமன்றமும் சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில்,தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போடப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்தும். தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்தது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற வழக்கு விசாரணையில், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோஹத்கி, சித்தார்த் லூத்ரா ஆகியோர் வாதிட்டாரக்ள்.
அப்போது, சவுக்கு சங்கர் கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு திரும்பப் பெறப்படுவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டு ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி கடந்த மே மாதம் 14ம் தேதி முதல் சிறையில் இருந்து வந்த சவுக்கு சங்கர், மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் இன்று வெளியே வந்தார்.