10 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம்

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை மணலியில் 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பெரம்பலுாரில் 7;மயிலாடுதுறையில் கொள்ளிடம், கடலுார் மாவட்டம் பெலாந்துறை, லால்பேட்டை, கொத்தவாச்சேரியில், தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு, திருவிடைமருதுார், அணைக்கட்டு, கடலுார் மாவட்டம் விருத்தாசலம், குப்பநத்தம் ஆகிய இடங்களில், தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் வட மாவட்டங்களில் அநேக இடங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலை, ஜூன் 16 வரை தொடர வாய்ப்புள்ளது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுார், அரியலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.