📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை
மத்ஹப் - இஸ்லாமிய சட்ட நிபுணர்களின் கருத்துகள்
மத்ஹப் என்றால் என்ன?
மத்ஹப் என்பது அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய சட்ட பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய மார்க்க மேதைகளால் எழுதப்பட்ட மார்க்க சட்ட திட்டங்களை குறிக்கும்.
மிக நுணுக்கமான மற்றும் புதிய பிரச்சினைகளுக்குரிய மார்க்க சட்ட திட்டங்களை ஒவ்வொரு பாமர முஸ்லிமாலும் அல் குர்ஆனை மற்றும் அல் ஹதீஸை ஆய்வு செய்து பெற முடியாது. காரணம் ஒவ்வொருவரும் அத்தகைய அறிவையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருப்பதில்லை. எனவே, அத்தகைய சட்ட திட்டங்களை மார்க்க மேதைகள் அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து தொகுத்து சட்டங்களாக இயற்றி பாமர மக்களுக்கு இலகுவாக விளங்கி கொள்ளக்கூடிய விதத்தில் அமைத்து கொடுத்துள்ளார்கள். அவையே மத்ஹப்கள் எனப்படுகிறது.
முழு உலகில் உள்ள முஸ்லிம்களாலும் நான்கு மத்ஹப்கள் பின்பற்றப்படுகின்றன. மத்ஹப் சட்டங்களுக்கிடையே சிறிது வித்தியாசங்கள் காணப்பட்டாலும் அனைத்துமே அல் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வழிமுறை ஆகியவைகளை கொண்டு பெறப்பட்ட சட்டங்கள் என்பதால் அவற்றில் ஏதேனும் ஒரு மத்ஹபை தாராளமாக பின்பற்றலாம்.
நான்கு மத்ஹப்களின் பெயர்களும் அதனை உருவாக்கிய இமாம்களும் வருமாறு:
மத்ஹப் உருவாக்கிய இமாம்கள்
ஹனபி மத்ஹப் இமாம் அபூ ஹனிபா (ரலியல்லாஹு அன்ஹு)
மாலிகி மத்ஹப் இமாம் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
ஷாபியீ மத்ஹப் இமாம் அல் ஷாபியீ (ரலியல்லாஹு அன்ஹு)
ஹன்பலி மத்ஹப் இமாம் அஹ்மத் இப்ன் ஹன்பல் (ரலியல்லாஹு அன்ஹு)
வட இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் ஹனபி மத்ஹபை பின்பற்றுகின்றனர். அதேபோல் இலங்கை, தென் இந்தியா போன்ற நாடுகளில் ஷாபியீ மத்ஹப் பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. எனவே, தத்தம் பிரதேசங்களில் மக்களால் பெரும்பாலும் பின்பற்றப்படும் மத்ஹபை பின்பற்றுவது சால சிறந்தது.