📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 07-01-2025 புதன்கிழமை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர். அந்த வகைகளை அறிந்து வைத்துக் கொண்டாலே ஹதீஸ்கலையில் பெருமளவு அறிந்து கொண்டதாகக் கொள்ளலாம்.
எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.
1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி ஒரு செய்தியை அறிவிக்கும்போது இன்று நாம் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. நூல்வடிவில் தொகுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குத் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ்கலை அறிஞர்கள் அதைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக்கொள்வார்கள். எல்லா ஹதீஸ் நூற்களும் இந்த வகைளில் தான் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழாக்க ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.
“தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது” என்பது முதலாவது ஹதீஸ்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்.
இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர்.
அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார்.
ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட வரைபடம் மூலம் விளங்கலாம்.
இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகிறார். இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.
ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description