'விரைவில் தடுப்பூசி செலுத்துங்கள்': கனடா மக்களுக்கு ஜஸ்டீன் ட்ரூடோ வேண்டுகோள்

கனடாவில் கொரோனா 5ஆம் அலை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெறத் தொடங்கியுள்ளது. தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கனடாவில் கொரோனா 5ஆம் அலை பாதிப்புகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கனடா எதிர்கொள்ளும் சுகாதார நெருக்கடி குறித்து புதன்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்களால் மக்களும், சுகாதாரப் பணியாளர்களும் விரக்தியடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே விமானம், ரயில் மற்றும் கப்பல்களில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்களுக்கு உடற்பயிற்சி கூடங்கள், மதுபான விடுதிகள், இரவு விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கனடாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40,696 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய வாரத்தை விட 78 சதவிகிதம் அதிகமாகும். மேலும் இதுவரை அந்நாட்டில் மொத்த மக்கள்தொகையில் 82 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசிகளையும், 77 சதவிகிதத்தினர் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description