நிலையான சர்வதேச ஒழுங்கு அவசியம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தான் போன்ற சிறிய நாடுகள் கூட மற்ற நாடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட முடியும். எனவே, நிலையான சர்வதேச ஒழுங்கு இன்றைய அவசியமாகிறது,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
டில்லியில் நடந்து வரும், ரெய்சினா மாநாட்டில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசியதாவது:
நாம் அனைவரும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்து பேசுகிறோம்.
ஜனநாயக சுதந்திரம்
இரண்டாம் உலகப் போருக்கு பின், ஒரு நாட்டின் குறிப்பிட்ட பகுதியை மற்றொரு நாடு நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ளது என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் தான்.
நாங்கள் ஐ.நா.,விடம் முறையிட்டோம். அவர்கள் படையெடுப்பை, சாதாரண பிரச்னை என்றனர். தாக்கியவரும், தாக்கப்பட்டவரும் சமமாக பார்க்கப்பட்டனர்.
இன்றைக்கு அரசியல் தலையீடு குறித்து பேசுகிறோம். பிற நாடுகளுக்குள் மேற்கத்திய நாடுகள் நுழைந்தால் அது ஜனநாயக சுதந்திரம் எனப்படுகிறது. அதுவே, பிற நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்குள் நுழைந்தால், அதில் தவறான உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது.
எதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும் எனில், அதில் நேர்மை வேண்டும். நமக்கு வலுவான ஐ.நா., தேவை, வலுவான ஐ.நா.,வுக்கு நேர்மை அவசியம். ஒரு நாடு பிறருக்கு அபாயத்தை ஏற்படுத்த அவர்கள் மிகப்பெரிய நாடாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை.
இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள, நிலையான சர்வதேச ஒழுங்கு வகுக்கப்பட வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரெய்சினா மாநாடு, 2016ல் துவங்கி ஆண்டு தோறும் டில்லியில் நடத்தப்படுகிறது. நம் வெளியுறவுத்துறையும், டில்லியில் உள்ள, 'ஆப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்' என்ற சர்வதேச சிந்தனை குழாமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
காலி செய்யுங்கள்
இதற்கிடையே, காஷ்மீரை சொந்தம் கொண்டாடி பாக்., வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்திருந்தது.
இதற்கு பதில் அளித்த நம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ''எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதாரிப்பதே பிரச்னைக்கு காரணம் என்பது உலகம் அறிந்ததே.
''சட்டவிரோதமாக அவர்கள் ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியை காலி செய்ய வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description