ஜின்னாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்த முன்னாள் பிரதமர் நேரு; 'வந்தே மாதரம்' பாடல் விவாதத்தில் மோடி விளாசல்
நாட்டுப்பற்றை போற்றக்கூடிய, 'வந்தே மாதரம்' பாடலை சிதைக்கும் நோக்கில், முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா தந்த அழுத்தத்துக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அடிபணிந்தார்.
''இப்படி மண்டியிட்டதால், அந்த பாடலுக்கு இழுக்கு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, நம் நாடு பிரிவினையை சந்திக்க நேரிட்டது,'' என, தேசிய பாடலான வந்தே மாதரம் மீதான சிறப்பு விவாதத்தில், லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். 'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில், லோக்சபாவில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது.
கலாசார சக்தி இதில் பிரதமர் மோடி பேசியதாவது: போற்றுதலுக்குரிய தேசப்பற்று பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகளானதை கொண்டாடி வருகிறோம். இந்த பாடலுக்கு, நுாற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த நேரத் தில் நெருக்கடி நிலை எனப் படும் கருப்பு காலத்தை நாடு சந்திக்க வேண்டிய தாயிற்று. அந்த பாடலுக்கு கிடைக்க வேண்டிய பெருமையை தடுத்து விட்டனர். தற்போது, வந்தே மாதரம் பாடலின், 150வது ஆண்டு விழாவை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது .
வந்தே மாதரம் பாடல், நம் கலாசார சக்தியை கூட்டக்கூடியது. அறிவுப்புதையலாக கருதப்படும் வங்கத்து மண், இந்த நாட்டிற்கே ஒளிகாட்டும் கருவியாக அந்த காலத்தில் இருந்தது என்பதற்கு, இந்த பாடல் ஒரு சான்று. இந்த பாடலுக்கு ஆங்கிலேயர்கள் தடை ஏற்படுத்திய போது, நம் சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பெண்கள் இதில் முக்கிய பங்கு வகித்தனர். தடை நீங்கும் வரை, வளையல் அணிய மாட்டோம் என்றெல்லாம் கூட அவர்கள் எதிர்ப்பை காட்டினர்.
குதிராம் போஸ், பிஸ்மில்லா, ரோஷன் சிங், ராம்பிரசாத் பிஸ்வாஸ் போன்ற மண்ணின் மைந்தர்கள், இந்த பாடலுக்காக துாக்கு மேடை ஏறவும் தயார் என, முழங்கினர். அத்தகைய உணர்ச்சி மிகுந்த கவிதை தான் இந்த பாடல். சுதேசி கப்பல் 'ஒரே இழையில், அனைத்து இதயங்களையும், உயிர்களையும் இணைக்க முடியும் என்றால், அது, வந்தே மாதரத்தால் தான் முடியும்' என, ரவீந்திரநாத் தாகூர் எழுதினார்.
பல நாடுகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இந்த பாடல் அனுப்பப்பட்டது. பிரிட்டனின் லண்டனில் இருந்த போது, வீர் சாவர்க்கர் கூட இந்த பாடலை பாடியுள்ளார். கப்பல்களில் ஏற்றுமதியாகும் தீப்பெட்டிகளில் கூட வந்தே மாதரம் எழுதப்பட்டது. விபின் சந்திரபால் துவக்கிய செய்தித்தாளின் பெயரும் வந்தே மாதரம் .
இந்த வரிசையில், 'தற்சார்பு பாரதம்' என்ற அடிப்படையில், உள்நாட்டு கப்பல்கள் விடப்பட்டன. அப்போது, 1907ல், தமிழகத்தில் சுதேசி கப்பலை உருவாக்கிய போது, அதிலும் வந்தே மாதரம் எழுதப்பட்டிருந்தது. தேசிய கவி பாரதியார் கூட, வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்ப்பு செய்ததோடு, அதன் பிரதிபலிப்பை, தன் பாடல்கள் வழியாக தமிழர்களின் மனதில் ஒலிக்கச் செய்தார். இது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.
தேசியக் கொடியை போற்றுவதற்காகவே 'தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்' என, கொடிப்பாடல் இயற்றி தேசப்பற்றை பாரதியார் ஊக்குவித்தார். 'நாட்டுப் பற்றாளர்களே, இந்த தேசிய கொடியைக் காணுங்கள்; தரிசனம் செய்யுங்கள். என் தாய்நாட்டின் புகழை பாடுங்கள்' என, அவர் அழைத்தார்.
மஹாத்மா காந்தி கூட, மற்ற நாடுகளின் தேசப் பாடல்களை விட இந்த வந்தே மாதரம் அருமையாக உள்ளது என, கூறியுள்ளார். அப்படிப்பட்ட இந்த பாடலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; துரோகம் நடந்துள்ளது. இது எதனால் ஏற்பட்டது; யாரின் அழுத்தத்தால் ஏற்பட்டது? காந்தியே போற்றிய பாடலுக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது? எப்போது சர்ச்சையாக மாறியது என்ற உண்மைகளை எல்லாம், இளம் தலைமுறையினருக்கு சொல்லியே ஆக வேண்டும். மிகப்பெரிய அவமரியாதையை செய்தது முஸ்லிம் லீக் தான். 1937ல், முகமது அலி ஜின்னா தான், வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான முழக்கத்தை முதலில் துவங்கினார்.
காங்., தலைவர் நேரு பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால், ஜின்னாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு பதிலடி தரவில்லை. அதற்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.உடனே, பாடல் குறித்து விசாரணையை துவங்கினர். ஐந்து நாட்களுக்கு பின், நேதாஜிக்கு ஒரு கடிதத்தை நேரு எழுதினார். அதில், ஜின்னாவின் கருத்துக்களை பகிர்ந்ததோடு, அவற்றை ஏற்பதாகவும் நேரு குறிப்பிட்டிருந்தார். மேலும், 'வந்தே மாதரம் பாடலின் பின்னணியை படித்தேன்.
இது முஸ்லிம் நண்பர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, 'வந்தே மாதரம் பாடல் மறுபரிசீலனை செய்யப்படும்' என, காங்., நிறைவேற்றிய தீர்மானத்தால் நாடே அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக, ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது.அதன்படி, வந்தே மாதரம் பாடலை, பகுதி பகுதியாக சிதைப்பது என, முடிவெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு திரை போட்டு அவர்கள் சூட்டிய பெயர் தான், 'சமூக நல்லிணக்கம்'. முஸ்லிம் லீக்கிடம் காங்., மண்டியிட்டதற்கு இந்த வரலாறே சாட்சி.
தாஜா அரசியலே காங்கிரசின் இந்த முடிவுக்கு காரணம். பாடலை வெட்டி சிதைத்ததன் மூலம், தாஜா அரசியலை காங்கிரசார் அமல்படுத்தினர் என்பதே உண்மை. இதன் மூலம், நம் நாட்டை துண்டாட காங்கிரசார் அனுமதித்தனர். இன்று வரை காங்., அப்படியே தான் உள்ளது. இந்த பாடல் என்பது பழங்கால பெருமை அல்ல. வெறும் பாடலோ கவிதையோ கிடையாது. நம் நாட்டிற்கான தொலைநோக்கு பார்வையை திட்டமிடுவதோடு, சுயசார்பு தயாரிப்புகளுக்கான கனவையும் இந்த பாடல் தரக்கூடியது. இதன்மூலம் வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
'தன்னம்பிக்கை இழந்த மோடி'
லோக்சபா காங்., எம்.பி., பிரியங்கா பேசியதாவது: நேருவையும், காங்கிரசையும் இழிவு படுத்த வேண்டும் என்ற ஒற்றை காரணத்துக்காக இந்த விவாதம் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வருகிறது.
அம்மாநில மக்களின் கவனத்தை திசை திருப்பவும், ஓட்டுகளை பெறவும் பிரதமர் மோடி தந்திரமாக செயல்படுகிறார். அவர் முன்பு இருந்த மாதிரி இல்லை. தன்னம்பிக்கை இழந்து சோர்ந்து காணப்படுகிறார். அவரது கொள்கைகள் நம் நாட்டை பலவீனப்படுத்துகின்றன. இது ஆட்சியில் உள்ளவர்களுக்கே நன்றாக தெரியும்.
பிரதமர் மோடி உட்பட பா.ஜ., தலைவர்கள் அனைவரும் நேருவை பற்றியே பேசி வருகின்றனர். வேண்டுமென்றால், நேருவை பற்றி இழிவாக பேசுவதற்காகவே ஒரு சிறப்பு விவாதத்தை வைத்துக் கொள்வோம். அவரை இஷ்டத்துக்கு சகட்டுமேனிக்கு திட்டி விட்டு, அசிங்கப்படுத்தி இதற்கு ஒரு முடிவு கட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.