'முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் கரூர் சம்பவத்தை அரசு தடுத்திருக்கலாம்': இபிஎஸ்.,

சென்னை: 'கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கரூர் துயரத்திற்கு காரணமான தி.மு.க., அரசை கண்டிக்க திராணியில்லாமல், ஏதோ இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பே இல்லை என்பதுபோல அரசியல் கட்சிகள் பக்கவாத்தியம் வாசிக்கின்றன.
கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறைவாலும் ஏற்பட்டது என, அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக, செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த செய்தியில் இருந்து தெரிவது என்னவென்றால், இந்த நிகழ்வை, அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கையாண்டிருந்தால், இந்த துயர சம்பவத்தை தடுத்திருக்க முடியும்.
கள நிலவரப்படி கூட்டம் நடந்த இடத்தில், போதுமான போலீசாரை நிறுத்தி, ஆரம்பம் முதலே கூட்டத்தை ஒழுங்குப் படுத்த, அரசு தவறி விட்டது என்பது தான் இதன் பொருள்.
விஜய் வாகனத்தை கூட்ட நெரிசலில் உள்ளே கொண்டு வரவும், அதை பாதுகாக்கவும் காட்டிய அக்கறையில், பொதுமக்களை பாதுகாப்பதில் போலீசார் காட்டவில்லை என்பது, இதன் வாயிலாக தெரிகிறது.
இந்த துயர சம்பவத்திற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய, மாநில அரசின் தவறுகளை மறைத்து, இந்த அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்கவாத்தியக்காரர்கள் நடுநிலையோடு உண்மையை பேச வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.