மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தார் பினராயி விஜயன்
மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவித்தார். கேரள எம்.பிக்கள் போராட்டத்தில் திமுக எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, மாண்பமை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டுமென்று தனது கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலங்களின் செயல்பாடு மற்றும் நிதி சுயாட்சி மீதான ஒன்றிய அரசின் பாகுபாடுகளுக்கு எதிராக பிப்ரவரி 8ம் தேதி டெல்லியில் கேரளா நடத்தும் போராட்டத்திற்கு ஒற்றுமை மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்தச் சைகை, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள கூட்டாட்சிக் கொள்கைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தீய முயற்சிகளை எதிர்த்து நிற்கும் நமது முயற்சிகளை ஊக்கப்படுத்துகிறது. ஒன்றாக, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்க முன்னோக்கிச் செல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.